சென்னை போரூர் பகுதியில், பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த அரசுப் பள்ளி மாணவர்களை நடத்துநர் கண்டித்த நிலையில், அவரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை போரூர் பகுதியில் மாநகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறிய சில அரசுப் பள்ளி மாணவர்கள், உள்ளே இடவசதி இருந்தபோதிலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த நடத்துநர், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பேருந்துக்குள் வந்து பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் பேருந்தை இயக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்துக்குள்ளேயே நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டிய மாணவர்கள், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட சக பயணிகள் மற்றும் பேருந்தில் இருந்த பெரியவர்கள் மாணவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சியையும் மீறி மாணவர்கள் நடத்துநரை தொடர்ந்து தாக்கியதால், பேருந்துக்குள் பரபரப்பும் கூச்சலும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்துநரை தாக்கியதாக கூறப்படும் அரசுப் பள்ளி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிப்பதும், நடத்துநரை தாக்கிய சம்பவமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.