சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 24 ஆயிரத்து 264 தூய்மைப் பணியாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உணவுக்கு மாற்றாக, தினமும் ரூ.50 உணவுப்படியாக வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக ரூ.44 கோடியே 28 லட்சத்து 18 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான தரமான உணவை, தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், அரசின் இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. சென்னையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், தற்போது வழங்கப்படும் ரூ.50 உணவுப்படியை ரூ.100 ஆக உயர்த்த வேண்டும் என்றும், மருத்துவ விடுப்பு மற்றும் பேறுகால விடுப்பில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இந்தத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.