சென்னையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் சிவசக்தி நகர் 4-வது தெருவைச் சேர்ந்த நித்யராஜின் மகன் டேமியன் சுனில் (19). திருவொற்றியூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று சுனில் பலகைத்தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய அவர், கடலில் மாயமானார். இதையடுத்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று கடற்கரையில் சுனிலின் உடல் ஒதுங்கிக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.