சென்னை அம்பத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து குதித்து 23 வயது வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி காந்திநகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (23), அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணியை முடித்த அவர், அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றார்.அங்கு 19-வது மாடிக்குச் சென்ற சந்தோஷ், திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது தலை மற்றும் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷ் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.