செஞ்சியில் மாயமான சிறுமி விற்பனை செய்யப்பட்டாரா? புதிய கோணத்தில் சிபிசிஐடி விசாரணை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
24 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செஞ்சியில் மாயமான சிறுமி விற்பனை செய்யப்பட்டாரா? புதிய கோணத்தில் சிபிசிஐடி விசாரணை

செஞ்சியில் மாயமான சிறுமி விற்பனை செய்யப்பட்டாரா? புதிய கோணத்தில் சிபிசிஐடி விசாரணை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதா, விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் - பவானி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகளான ஹேமலதா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, மறுநாள் 12-ம் தேதி அதிகாலை ஹேமலதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் கீதா தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கினர். விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில், இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, சிறுமி மாயமானது தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சத்தியமங்கலம் போலீசார் சிபிசிஐடி குழுவிடம் ஒப்படைத்தனர். ஆவணங்களை ஆய்வு செய்த சிபிசிஐடி போலீசார், தங்களது பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக ஆலம்பூண்டி கிராமத்திலேயே முகாமிட்டுள்ள அதிகாரிகள், பல்வேறு கோணங்களில் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, கிடைத்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன. மேலும், சிறுமி மாயமான வீட்டைச் சுற்றியுள்ள பகுதியின் வரைபடத்தைத் தயாரித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சிறுமி உயிருடன் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக போலீசார் கருதுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சிறுமி யாருக்கேனும் விற்பனை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் மையமாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியை விரைவில் மீட்க முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹேமலதா மாயமாகி 13 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும், அவர் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்தச் சம்பவத்தில் நிலவும் மர்மம் இன்னும் விலகவில்லை.