விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் 6 வயது சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக, அவரது பெற்றோரை நேரில் சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆறுதல் தெரிவித்தார். ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (6). கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேடுதல் பணியையும் விசாரணையையும் தொடங்கினர். இருப்பினும், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் சிறுமி இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்களும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி சிறுமியைத் தேடி வருகின்றனர். ஆனாலும், 34 நாட்களைக் கடந்தும் ஹேமலதா குறித்த எந்தத் தகவலும், துப்பும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், சிறுமியின் வீட்டிற்குச் சென்ற கனிமொழி எம்.பி., அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்று, குழந்தையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க முடியாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "இன்று செஞ்சியில் காணாமல் போன சிறுமி ஹேமலதாவின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், ஆட்சி அதிகாரம் எதற்கு, முதல்-அமைச்சரே? பெற்ற குழந்தை எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் 35 நாட்களாகத் தவித்துக் கொண்டிருக்கும் தாயின் கண்ணீருக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?" எனக் கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.