தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ரெயிலில் அடிபட்டு புலி ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றில் சில விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்துகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகரை பகுதியில் சிறுத்தை ஒன்று பசுமாட்டைக் கொன்று இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில், பகவதிபுரம் - செங்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பூலாங்குடியிருப்பு பகுதியில் சென்றபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற புலி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் அந்தப் புலி உயிரிழந்தது. தகவல் கிடைத்ததும் மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தலைமையிலான வனத்துறைக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். புலி உயிரிழந்ததற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே பகவதிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றின் கால்தடங்கள் தென்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்களுக்கும் வனவிலங்குகளால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது குடியிருப்புப் பகுதிக்கு அருகே ரெயில் மோதி புலி உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.