தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் கம்பத்தில் இருந்து ஏலக்காய் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றபோது, வழியில் எதிர்பாராத விதமாக லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதற்காக மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்குப் பாலகிருஷ்ணன் சென்றுள்ளார். புகாரில் சில சந்தேகங்கள் இருந்ததாகக் கூறி, விசாரணைக்காக காவல் நிலையத்திலேயே இருக்குமாறு போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவல் நிலைய வளாகத்தில் உள்ள கழிவறையில் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல் நிலையத்திலேயே லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள் செக்கானூரணி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.