சூரி நடிக்கும் புதிய திரைப்படம்.. பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சூரி நடிக்கும் புதிய திரைப்படம்.. பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

சூரி நடிக்கும் புதிய திரைப்படம்.. பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

தமிழ் திரையுலகில் கதாநாயகனாகத் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகர் சூரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரங்களுக்குப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் வெளியானது. கடலில் நடைபெறும் படகுப் போட்டியைப் பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் சூரியின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே, ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி புதிய படத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சூரியின் ஏழாவது படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு தற்காலிகமாக ‘சூரி 7’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி முதல் காட்சியைப் பதிவு செய்தார். இந்த விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், மதிமாறன், கீர்த்தீஸ்வரன், ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதில் நடிகை ராஜிஷா விஜயனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.