சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் – ஸ்ரீநிஷா திருமண நிச்சயதார்த்தம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் – ஸ்ரீநிஷா திருமண நிச்சயதார்த்தம்

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் – ஸ்ரீநிஷா திருமண நிச்சயதார்த்தம்

பிரபல பின்னணிப் பாடகர்களான சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஸ்ரீநிஷா. அதேபோல், ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் சாம் விஷால். தனது 7 வயதிலேயே சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீநிஷா, தனித்துவமான குரலால் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றார். போட்டியின் அரையிறுதிச் சுற்றில் வெளியேறினாலும், இசைத்துறையில் தொடர்ந்து பயணித்து தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். 2014-ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான ‘அவன் இவன்’ திரைப்படத்தின் ‘ஒரு மலையோரம்’ பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து இளையராஜா, சந்தோஷ் நாராயணன், ஹிப் ஹாப் தமிழா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் உருவான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ‘அம்மா கணக்கு’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘99 சாங்ஸ்’, ‘லாபம்’ உள்ளிட்ட படங்களிலும் இவரது குரல் இடம்பெற்றுள்ளது. மறுபுறம், சாம் விஷால் திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, சொந்தமாகப் பாடல்களை எழுதி, இசையமைத்து வெளியிடும் சுயாதீன இசைக் கலைஞராகவும் செயல்பட்டு வருகிறார். அனிருத் இசையமைத்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் இடம்பெற்ற ‘சிட்டி ஸ்டோரி’ பாடலைப் பாடியதன் மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் இணைந்து பாடி வந்த சாம் விஷால், ஸ்ரீநிஷா இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. தற்போது இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய முடிவு செய்துள்ளனர். இதன் முதல்படியாக, நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்ரீநிஷா, 'Wish Mode 11:11' எனக் குறிப்பிட்டுள்ளார். சாம் விஷால் – ஸ்ரீநிஷா ஜோடியின் நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இசை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.