தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 3-ஆவது நாளாக இந்தத் தடை அமலில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அருவிக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. அருவியில் தண்ணீர் அதிக வேகத்துடன் கொட்டுவதால், அங்கு அபாயகரமான வெள்ளப்பெருக்கு நிலவுகிறது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கம்பம் மேற்கு வனச்சரக வனத்துறையினர் அருவியில் குளிக்கத் தடை விதித்துள்ளனர். தடை 3-ஆவது நாளாக நீடிப்பதால், பல்வேறு ஊர்களில் இருந்து சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அருவியில் நீர்வரத்து குறைந்து நிலைமை பாதுகாப்பானதாக மாறிய பின்னரே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.