தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் தொடர்ந்து குறைத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த அளவுக்குக்கூட கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கி இதுவரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 55 டி.எம்.சி. தண்ணீர் நிலுவையில் உள்ள நிலையில், ஆணையம் நிர்ணயித்த குறைந்தபட்ச அளவையும் வழங்காதது கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயத் தேவையை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 12 முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல நாட்கள் அந்த அளவில் நீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 27 முதல் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.இருப்பினும், ஆகஸ்ட் 27 முதல் 30-ம் தேதி வரையிலான நான்கு நாட்களிலும் பிலிகுண்டுலு நீரளவு கண்காணிப்பு மையத்தை எட்டிய நீரின் அளவு 9,000 கனஅடிக்கும் குறைவாகவே இருந்தது.ஆகஸ்ட் 26-ம் தேதி வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வர வேண்டிய நிலையில், 10,405 கனஅடி மட்டுமே வந்துள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 27 முதல் தினமும் 9,000 கனஅடி நீர் வர வேண்டும் என்ற நிலையில், 27-ம் தேதி 7,454 கனஅடி, 28-ம் தேதி 7,094 கனஅடி, 29-ம் தேதி 6,702 கனஅடி, 30-ம் தேதி 6,887 கனஅடி மட்டுமே பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது.இதற்கிடையே, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 13,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதில் பாதியளவு மட்டுமே பிலிகுண்டுலுவை வந்தடைவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.கர்நாடக அணைகளில் இருந்து பிலிகுண்டுலு வரையிலான பயணத்தில் 1 முதல் 2 சதவீதம் வரை நீர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் தினமும் 20 முதல் 25 சதவீதம் வரை குறைவான தண்ணீரே தமிழகத்தை வந்தடைவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக கணக்கு காட்டிவிட்டு, அந்த நீரை கர்நாடகம் வேறு பயன்பாட்டிற்கு திருப்பி விடுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி., ஆகஸ்ட் 27-ம் தேதி வரை 40.10 டி.எம்.சி. என மொத்தம் 80.50 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், ஜூன் மாதத்தில் 2.91 டி.எம்.சி., ஜூலையில் 0.71 டி.எம்.சி., ஆகஸ்ட் 27-ம் தேதி வரை 21.9 டி.எம்.சி. என மொத்தம் 25.58 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமேகர்நாடகத்தால்வழங்கப்பட்டுள்ளதாகஅவர்தெரிவித்துள்ளார். இதனால் ஜூன் மாதம் முதல் கணக்கிட்டால் 55 டி.எம்.சி. தண்ணீர் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.தற்போதைய நிலவரப்படி, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகளில் மொத்தம் 82 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருப்பதாகவும், அந்த நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 12,000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். இவ்வளவு நீர் இருப்பினும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தயக்கம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இப்போதே கர்நாடக அரசு இத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் நிலையில், எதிர்காலத்தில் மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால்தான் மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் என்று பா.ம.க. தொடர்ந்து கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 52 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதால், அதைக் கொண்டு 40 நாட்களுக்குக்கூட நீரை வழங்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெறத் தவறினால், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.எனவே, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைப்பதுடன், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.