சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: கவர்னர் அர்லேகர் புகழாரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: கவர்னர் அர்லேகர் புகழாரம்

சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: கவர்னர் அர்லேகர் புகழாரம்

சுதந்திர இந்தியாவின் ஒற்றுமைக்கு வலுவான அடித்தளமிட்ட சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக கவர்னர் அர்லேகர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பர்தோலியில் விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றவர் வல்லபாய் படேல். இதனால் மக்கள் அவரை அன்புடன் 'சர்தார்' (தலைவர்) என்று அழைத்தனர். வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தனது மனைவி உயிரிழந்த செய்தியை அறிந்தார். இருப்பினும், வழக்கை முழுமையாக நடத்தி வெற்றி பெற்ற பின்னரே அந்தத் துயரச் செய்தியை மற்றவர்களிடம் தெரிவித்து அங்கிருந்து சென்றார். சுதந்திரப் போராட்டத்தின்போது எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளையில் மகாத்மா காந்தியுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், பிரதமர் பதவி அவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும், காந்தியின் வேண்டுகோளை ஏற்று அந்தப் பொறுப்பை ஜவஹர்லால் நேருவுக்கு விட்டுக்கொடுத்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்ற படேல், நாடு முழுவதும் தனித்தனியாக இருந்த 565 சமஸ்தானங்களை மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவுடன் இணைத்து ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இதன் காரணமாகவே அவர் 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படுகிறார். மேலும், இந்திய நிர்வாகப் பணிகள் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு. நர்மதை நதிக்கரையில் உலகின் மிக உயரமான சிலையாகத் திகழும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், அவரது அரும்பணிகளையும் நாட்டிற்காக ஆற்றிய சேவைகளையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். இவ்வாறு கவர்னர் அர்லேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.