சீனாவில் இருந்து வியட்நாம் வழியாக தூத்துக்குடிக்கு நேரடியாக சரக்குகளை கொண்டு வரும் புதிய கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்சீனா மற்றும் வியட்நாமுடனான தூத்துக்குடி துறைமுகத்தின் கடல்வழி வர்த்தக இணைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையே சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரீஜினல் கண்டெய்னர் லைன் நிறுவனம் புதிய கப்பல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் கீழ், சீனா மற்றும் வியட்நாம் வழியாக தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையின் முதல் கப்பலான எம்.வி. நவதா பூம் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலுக்கு துறைமுக மற்றும் சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். 147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 1,100 சரக்கு பெட்டகங்களை கையாள முடியும். கப்பல் செல்லும் வழித்தடம் சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்படும் இந்த கப்பல், வியட்நாமின் ஹைபோங் துறைமுகம் வழியாக தூத்துக்குடியை வந்தடைகிறது. பின்னர் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கும், அங்கிருந்து வியட்நாமின் சூலாய் துறைமுகத்திற்கும் செல்கிறது. தொடர்ந்து சீனாவின் கின்ஷோ துறைமுகத்திற்கு திரும்புகிறது. கின்ஷோவில் இருந்து தூத்துக்குடியை அடைய 13 நாட்கள் ஆகும். அதேபோல், வியட்நாமின் ஹைபோங் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்குகளை கொண்டு வர 12 நாட்கள் தேவைப்படுகிறது. வாரத்தில் இருமுறை கப்பல் இயக்கம் தற்போது இந்த சேவை வாரத்திற்கு இரண்டு முறை செயல்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகர்களின் தேவையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் கப்பல் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேரடி சரக்கு போக்குவரத்து வசதி மூலம் சீனா மற்றும் வியட்நாமுடனான கடல்வழி வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூரிய மின்தகடுகள் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழில்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.