சிவகங்கையில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை : 5 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

சிவகங்கையில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை : 5 பேர் கைது

சிவகங்கையில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை : 5 பேர் கைது

சிவகங்கை அருகே கண்மாய்க்குள் தப்பி ஓடிய 2 வாலிபர்களை ஒரு கும்பல் பின்தொடர்ந்து சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் வந்த புதிய காரையும் அந்த கும்பல் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது. இந்த இரட்டை கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை அடுத்த குருந்தணி அருகே உள்ள காயா ஓடை புதுகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (35). கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுபார் நடத்தி வரும் இவர், சமீபத்தில் சிவகங்கையில் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை முதல் சர்வீசுக்கு கொண்டு செல்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், தெய்வேந்திரனும், மறவமங்கலம் அருகே சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூப்பாண்டி (30) என்பவரும் நேற்று மதியம் காரில் சிவகங்கை கொடிக்காடு கண்மாய் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு கண்மாய் கரையில் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் சிலர் அங்கு வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் தெய்வேந்திரனும், பூப்பாண்டியும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கண்மாய்க்குள் இறங்கி ஓடினர். ஆனால், அவர்களை விடாமல் பின்தொடர்ந்து சென்ற அந்த கும்பல், இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கும்பல் இருவரின் முகங்களையும் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்துள்ளது. மேலும், தெய்வேந்திரன் வாங்கியிருந்த புதிய காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, துணை சூப்பிரண்டு அமல அட்வின், நகர் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனர். கொலை நடந்த கண்மாய் கரையில் மதுபான பாட்டில்களும், 3 ஜோடி செருப்புகளும் கிடந்தன. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா கூறுகையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கொலையில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்வதாகவும், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரட்டை கொலை தொடர்பாக பாலமுருகன் (24), தனராஜ் (19), சந்தோஷ் (19), சதீஷ்குமார் (25), காளீஸ்வரன் (23) ஆகிய 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.