சிவகங்கை அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 9 மாணவ, மாணவிகள் மற்றும் பெண் உதவியாளர் ஒருவர் பலத்த காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிக்காக மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சிவகங்கை - மேலூர் நெடுஞ்சாலையில் கோமாளிபட்டி அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது சிவகங்கையில் இருந்து மேலூர் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, எதிர்பாராதவிதமாக பள்ளிப் பேருந்து மீது மோதியது. மோதலின் வேகத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.இந்த விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம்புல்லுகோட்டை பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் (65) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பேருந்தில் இருந்த 5 மற்றும் 6-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேருக்கும், பெண் உதவியாளர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.