தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜே.கே. திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மையில் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், கைதிகள் தப்பிச் செல்ல வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநர் கே. சங்கர், சிறைத்துறையின் முன்னாள் துணைத் தலைவர் எஸ். ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாநில சிறைகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இக்குழு ஆய்வு செய்யும். மேலும், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகள், தற்போதைய பணிச்சுமைக்கு ஏற்ப போதுமான பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பன உள்ளிட்ட அம்சங்களும் விரிவாக ஆராயப்படும். இதுதவிர, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிறைச்சாலை பாதுகாப்பிற்காகப் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளையும் ஆய்வு செய்து, தமிழக சிறைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளை இக்குழு அரசிடம் வழங்க உள்ளது. தனது ஆய்வு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் பலப்படுத்த வேண்டும் என்றும், பணியில் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.