தமிழகத்தின் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக செயல்படும் அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 பேருக்கும், விரல்ரேகைப் பிரிவைச் சேர்ந்த 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த 4 அலுவலர்களுக்கும் ‘தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடலில் சிக்கிய சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர் கடந்த 19.05.2026 அன்று காலை சுமார் 9.45 மணியளவில் நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 9 வயது சிறுமி வைஷ்ணவியை பொதுமக்கள் மீட்ட நிலையில், 9 வயது சிறுவன் சைலேஷ் கரையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் கடலுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அப்போது தனது இரவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர், இந்த சம்பவத்தை அறிந்ததும் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து உடனடியாக கடற்கரைக்குச் சென்று, அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி தனது பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் நீந்திச் சென்றார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவன் சைலேஷை மீட்டு கரைக்கு அழைத்து வந்து அவரது உயிரைக் காப்பாற்றினார். ராஜசேகரின் இந்த துணிச்சலான செயலை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். அவரது துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், ‘தமிழக முதல்-அமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்’ வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேற்கண்ட அனைத்து பதக்கங்களும் தமிழக முதல்-அமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.