கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ்.சுவிஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சின்னத்திரை பிரபலமான சித்து சித் கதாநாயகனாகவும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமான தர்ஷிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ரித்விகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சென்னையில் நடைபெற்ற படத்தின் விழாவில் கலந்து கொண்ட நடிகை ரித்விகா, ‘தி டார்க் ஹெவன்’ இதுவரை வந்த கிரைம்-திரில்லர் படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என தெரிவித்தார். குறிப்பாக, படத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது சினிமாவில் ஒரு புதிய கலாசாரம் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட ரித்விகா, குறிப்பிட்ட வகை திரைப்படங்கள் தியேட்டருக்கானவை என்றும், சில படங்கள் ஓ.டி.டி.க்கானவை என்றும் பிரித்து பார்க்கும் நிலை இருப்பதாகக் கூறினார். அனைத்து திரைப்படங்களையும் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்ப்பதே சினிமாவுக்கு சிறந்தது என்றும், பின்னர் ஓ.டி.டி.யில் வெளியாகும்போது அவற்றை மீண்டும் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். எனவே, ‘தி டார்க் ஹெவன்’ படத்தை நம்பிக்கையுடன் பார்க்க ரசிகர்கள் வரலாம் என்றும் அவர் கூறினார். மேலும், இதுவரை தனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் குடும்பப் பின்னணியுடன் கூடிய பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டதாக ரித்விகா தெரிவித்தார். ஆனால், ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் கதை தனக்கு பிடித்திருந்ததால், எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தபோதிலும் அதை விரும்பி ஏற்றுக்கொண்டு நடித்ததாகக் கூறினார். நாயகன் சித்து பேசுகையில், இதற்கு முன்பு ஓரிரு படங்களில் சிறிய அளவில் நடித்திருந்தாலும், முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தனது புதிய பயணத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து, தங்களது இதயத்தில் தனக்கென சிறிய இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.