சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தார் ஊற்றும் இயந்திர வாகனம் மீது அடுத்தடுத்து இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில், 31 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் தந்தையும், அவரது 5 வயது மகனும் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் வீட்டுமனைப் பிரிவில் சாலை அமைக்கும் பணிக்காக தார் ஊற்றும் இயந்திர வாகனம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வாகனம் திடீரென பஞ்சரானது. இதையடுத்து, வாகனத்தை இயக்கி வந்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், எவ்வித எச்சரிக்கைப் பலகையோ, ஒளிரும் பாதுகாப்பு விளக்குகளோ அமைக்காமல் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு அந்த வழியாக பைக்கில் சென்ற பிரவீன் (31), இருட்டில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தார் இயந்திர வாகனத்தை கவனிக்காமல் அதன் மீது வேகமாக மோதினார். இந்த விபத்தில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே, அதே வழியாக மற்றொரு பைக்கில் வந்த பிரசாத் (35), தனது 5 வயது மகனுடன் அதே தார் இயந்திர வாகனம் மீது மோதினார். இதில் இருவரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். விபத்தின் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த தந்தை மற்றும் சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார், உயிரிழந்த பிரவீனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தார் இயந்திர வாகனத்தை நிறுத்திச் சென்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் வாகன உரிமையாளரின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வாழப்பாடி போலீசார், தலைமறைவாக உள்ள வாகன ஓட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.