நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கொன்னையார் கிராமத்தைச் சேர்ந்த சுபிதா (19), கல்லூரியில் படித்து வந்தார். நேற்று (03.09.2026) மாலை, தனது சகோதரிகளான பள்ளி மாணவிகள் நிவேதா (17), தனுஸ்ரீ (13), அபிநயா (12) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.அப்போது, தனியார் கல்லூரிப் பேருந்துடன் இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுபிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார்.நான்கு மாணவிகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.