பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு 90 வயது. மதுரையைச் சேர்ந்த அவர், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழக மக்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான உரைகளாலும் புகழ்பெற்றவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு அவர் உரையும் எழுதியுள்ளார். சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் உறவினர்கள் முன்னிலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. துப்பாக்கிக் குண்டுகள் முழங்காமல் அவரது உடலுக்கு அரசு சார்பில் கவுரவ மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, தத்தநேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மதுரையில் உள்ள சாலமன் பாப்பையாவின் இல்லத்திற்குச் சென்ற மாநகராட்சி மேயர் (பொறுப்பு) நாகராஜன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலமன் பாப்பையா வசித்த தெருவுக்கு அவரது பெயரைச் சூட்டும் வகையில் மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.