திரையுலகில் நடனத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகைகள் பட்டியலில், தற்போது இளம் நடிகை நாகதுர்காவும் இணைந்துள்ளார். ஒரு காலத்தில் நடனம் என்றாலே முன்னணி நடிகர்களின் பெயர்களே அதிகம் பேசப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சிறப்பான நடனத் திறமையால் ரசிகர்களை கவரும் கதாநாயகிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடிப்புடன் சேர்ந்து, நடனமும் அவர்களின் முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது. அந்த வரிசையில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இருவரும் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தை பிடித்துள்ளனர். சவாலான நடன அசைவுகளையும் மிக எளிதாக வெளிப்படுத்தும் இவர்களின் திறமை, அவர்கள் இடம்பெறும் பாடல்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளின் முக்கிய ஈர்ப்பாக இவர்களின் நடனம் அமைந்துள்ளது. அதேபோல், 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜுவும் தனது நடனத் திறமையால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். பாரம்பரிய நடனப் பயிற்சி பெற்றிருப்பதால், அவரது அசைவுகளில் இயல்பும் தனித்துவமும் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், நாட்டுப்புறக் கலைப் பின்னணியுடன் இயல்பான நடன அசைவுகளால் கவனம் ஈர்த்து வரும் நாகதுர்கா, ரசிகர்களிடையே புதிய ‘டான்சிங்குயின்’ என பேசப்பட்டு வருகிறார். இதனுடன், நடிகையாகவும் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள நாகதுர்கா, 'லவ் ஓ லவ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.