சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சை புளியம்பட்டியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு ஈரோடு, கோவை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டு வந்த சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது படிப்படியாக உயர்ந்து ரூ.150 வரை எட்டியுள்ளது. இதனால், அத்தியாவசிய சமையல் பொருளான சின்ன வெங்காயத்தை வாங்குவதற்குப் பொதுமக்கள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், பெரிய வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என்ன என்பது குறித்து வியாபாரிகள் கூறுகையில், மழை இல்லாததால் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதன் தேவை அதிகரித்திருப்பதும் விலை உயர்வுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டனர். வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.150 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.