சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்? - மாணிக்கம் தாகூர் விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்? - மாணிக்கம் தாகூர் விளக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்? - மாணிக்கம் தாகூர் விளக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் கணக்கெடுப்பை அவசரமாக முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பு முறையாகவும் துல்லியமாகவும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர், நாட்டில் பாதிக்கும் அதிகமான மக்கள் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தும், அவர்களின் சரியான எண்ணிக்கை பல ஆண்டுகளாக தெரியாத நிலை உள்ளது. இதனால் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்களின் உண்மையான எண்ணிக்கை அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டால்தான் சமூகநீதியை முழுமையாக உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அரசியலமைப்புச் சட்டத்தின் 340-வது பிரிவு பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கான வழிவகையை ஏற்படுத்துகிறது. ஆனால், தேவையான புள்ளிவிவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், அந்த சட்டப்பிரிவை அரசு முறையாக செயல்படுத்த முடியாது என்றும், துல்லியமான சாதிவாரி கணக்கெடுப்பு இதற்கு அவசியம் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.மேலும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் யூகத்தின் அடிப்படையில் இல்லாமல், உண்மையில் தேவைப்படும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சென்றடைய சரியான மக்கள் தொகைத் தரவுகள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசு முன்வைத்துள்ள கேள்வித்தாள் முறையிலும் குளறுபடிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சாதிப் பெயரை வெவ்வேறு எழுத்து அல்லது உச்சரிப்பு முறைகளில் பதிவு செய்தால், அவை தனித்தனி பிரிவுகளாக கணக்கிடப்படும் நிலை ஏற்படலாம். இதனால் ஒட்டுமொத்த ஓ.பி.சி. மக்களின் எண்ணிக்கை மற்றும் பிரதிநிதித்துவம் சிதைவடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.‘சாதிவாரிக் கணக்கெடுப்பில் முறைகேடு; ஓ.பி.சி. இடஒதுக்கீட்டுக்குப் பெருங்கேடு’ என்ற முழக்கத்துடன் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த உள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் திட்டமிடப்படாத மற்றும் முறையற்ற கணக்கெடுப்பால் மக்களின் வரிப்பணம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்படும் என அவர் கூறியுள்ளார். தவறான புள்ளிவிவரங்களுக்காக வரிப்பணத்தை செலவிடுவதற்கு பதிலாக, தற்போதைய கேள்வித்தாள்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வெளிப்படையான புதிய சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இந்த விழிப்புணர்வு பரப்புரை வரும் செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் ஆசிரியர் கி. வீரமணி மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து சென்னை, திண்டுக்கல், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராணிப்பேட்டை மற்றும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் பரப்புரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. ஈரோட்டில் இந்த விழிப்புணர்வு பயணம் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.மேலும், மத்திய பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட குளறுபடிகளால் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு ஆபத்தில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், இடஒதுக்கீட்டை நிலைநாட்டவும் அனைவரும் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்காக காங்கிரஸ் தொடர்ந்து சமரசமின்றி போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.