சாக்கு மூட்டையில் பிணங்கள் மீட்பு: தாய்-மகள் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

13 Sep 2026 www.thinathulir.com

சாக்கு மூட்டையில் பிணங்கள் மீட்பு: தாய்-மகள் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

சாக்கு மூட்டையில் பிணங்கள் மீட்பு: தாய்-மகள் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் உள்ள பவானி ஆற்றில், சாக்கு மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண் மற்றும் சிறுமியின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரோனிதா (35) மற்றும் அவரது 4 வயது மகள் ஜோஹிதா என்பது தெரியவந்தது. இருவரையும் கொலை செய்ததாக அவர்களுடன் அட்டப்பாடியில் வசித்து வந்த பிரவோத் தாஸ் (37) என்பவர் அடையாளம் காணப்பட்டார். சம்பவத்துக்குப் பிறகு அவர் தலைமறைவாகி மேற்கு வங்கத்தில் பதுங்கியிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மேற்கு வங்கத்துக்கு சென்ற போலீசார் பிரவோத் தாஸை கைது செய்து பாலக்காட்டுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, கொலை நடைபெற்றதாக கூறப்படும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரவோத் தாஸுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அவர் மேற்கு வங்கத்தில் உள்ள பிளைவுட் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, தன்னுடன் வேலை செய்த ஒருவரின் மனைவியான பிரோனிதாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரோனிதாவுக்கு ஜோஹிதா என்ற மகள் இருந்துள்ளார். நாளடைவில் பிரோனிதாவுக்கும் பிரவோத் தாஸுக்கும் இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. பின்னர் பிரோனிதாவையும் அவரது மகளையும் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடிக்கு பிரவோத் தாஸ் அழைத்து வந்துள்ளார். அங்கு மூவரும் ஒன்றாக தங்கியிருந்த நிலையில், பிரவோத் தாஸ் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரோனிதா கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், கர்ப்பம் உறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சம்பவத்தன்று வீட்டில் பிரோனிதாவுக்கும் பிரவோத் தாஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த பிரவோத் தாஸ் கத்தியால் தாக்கி பிரோனிதாவையும் அவரது மகள் ஜோஹிதாவையும் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைகளில் கட்டிய அவர், அவற்றை அங்குள்ள பவானி ஆற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரவோத் தாஸை போலீசார் அட்டப்பாடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.