உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ‘குளோபல் சவுத்’ எனப்படும் வளரும் மற்றும் ஏழை நாடுகள், சர்வதேச விதிகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் சக்தியாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர்களால் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களில் இருந்து வளரும் நாடுகளை பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் ‘குளோபல் சவுத்’ நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் அவை இன்னும் பின்தங்கியுள்ளன. தற்போதைய உலக நிர்வாக அமைப்பு அதிகாரமும் முடிவெடுக்கும் சக்தியும் மேல்மட்டத்தில் குவிந்துள்ள பிரமிடு போன்ற கட்டமைப்பாக உள்ளது. கீழ்மட்டத்தில் இருக்கும் நாடுகள் அந்த முடிவுகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால், அந்த முடிவுகளை உருவாக்குவதிலோ மாற்றுவதிலோ அவற்றுக்கு போதிய வாய்ப்பு இல்லை. எனவே, இந்த ‘சலுகை பிரமிடு’ அமைப்பை, அனைத்து நாடுகளுக்கும் சமமான குரலும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிய பங்களிப்பும் கிடைக்கும் ‘கூட்டாண்மைக்கான தளமாக’ மாற்ற வேண்டும். மனிதகுலத்தின் முன்னேற்றமே அனைத்து முயற்சிகளுக்கும் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். உலகளாவிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள 10 முக்கிய முன்மொழிவுகளை பிரிக்ஸ் நாடுகள் இணைந்து உருவாக்க வேண்டும். அடுத்த உச்சிமாநாட்டிற்குள் அவற்றை ‘பிரிக்ஸ் சீர்திருத்த வரைபடமாக’ தயாரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி முன்மொழிந்தார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் உடனடியாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். பாதுகாப்பு சபை சீர்திருத்தங்களை மேலும் தாமதப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். உலகம் சந்தித்து வரும் பல்வேறு சவால்களை சமாளிக்க ‘குளோபல் சவுத்’ நாடுகள் சர்வதேச விதிகளை உருவாக்கும் சக்தியாக மாற வேண்டும். மேலும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அந்த நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த கருத்துகளை முன்வைத்தார். மாநாட்டில் அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலி, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.