சர்க்காரியா கமிஷன் தொடர்பான விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தமிழக முதல்-அமைச்சர் விஜய் தயாரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போதைய ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில்தான், முதல்-அமைச்சர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை தற்போது பேசுகிறார். அவரது ஆட்சியின் 116 நாட்களில் நடைபெற்ற கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதாரங்களுடன் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால், இவற்றுக்கு பதில் அளிக்காமல், ஏற்கனவே முடிவடைந்த சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை விஜய் பேசியுள்ளார். சர்க்காரியா கமிஷன் தொடர்பான முழுமையான பின்னணி அவருக்குத் தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய சூழலில் சர்க்காரியா கமிஷன் குறித்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வது எங்களைப் போன்றவர்களின் கடமை. விஜய் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. சர்க்காரியா கமிஷன் எந்தச் சூழலில் அமைக்கப்பட்டது என்பதை முதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும். அவசரநிலை அமலில் இருந்த காலகட்டத்தில்தான் அந்த ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது இன்றுள்ள அளவுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது. பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பத்திரிகை சுதந்திரமும் இல்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பு இல்லாத சூழல் நிலவியது. செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகாததுடன், அவற்றுக்கான மறுப்புகளும் வெளியிடப்படவில்லை. அந்த காலகட்டத்தில் ஆணையத்தை அமைத்த இந்திரா காந்தியே, 1980-ம் ஆண்டு கடற்கரைக்கு வந்து, அவசரநிலை காலத்தில் தனது கவனத்துக்கு வராமல் சில தவறுகள் நடைபெற்றதாகக் கூறி, கலைஞர் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் பத்திரிகைத் துறையினருக்கும், அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கும், மூத்த அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். தமிழக முதல்-அமைச்சர் விஜயிடம் நான் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். அவர் கூறியவற்றில் உண்மை இருப்பதாகவும், இதுகுறித்து விவாதிக்கும் துணிச்சல் இருப்பதாகவும் கருதினால், எங்களுடன் சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாங்கள் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம். அவர் அதற்கு தயாரா? இதற்கு ஒரு உதாரணம் உள்ளது. சர்க்காரியா கமிஷன் தொடர்பாக புகார் அளித்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். திமுக அல்லது கலைஞர் தவறு செய்திருந்தால், அந்த காலகட்டத்தில் எங்கள் மீது வழக்குகள் தொடர்ந்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு அத்தகைய வழக்கை ஏன் தொடரவில்லை? 1977-ம் ஆண்டு அக்டோபரில் இந்திரா காந்திக்கு நாங்கள் கருப்புக்கொடி காட்டினோம். அந்தப் போராட்டம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கலைஞருடன் நாங்களும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டோம். எப்படியாவது எங்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், அன்றைய அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கு நாங்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் உச்ச நீதிமன்றம் வரை அந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. 1977-ம் ஆண்டு நடைபெற்ற அந்த கருப்புக்கொடி போராட்டம் தொடர்பான வழக்கு 1996-ம் ஆண்டு பிப்ரவரியில்தான் முடிவுக்கு வந்தது. ஒரு சம்பவத்தின் மூலம் முழு விவகாரத்தையும் புரிந்துகொள்ள முடியும். முதல்-அமைச்சர் விஜய் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே இந்தப் பேச்சை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் அரசியல் தரம், மாண்பு, பாரம்பரியம் மற்றும் சட்டமன்ற மரபுகள் அனைத்தும் இன்று சட்டப்பேரவையில் மீறப்பட்டுள்ளன. ஒரு சாதாரண கருப்புக்கொடி போராட்ட வழக்கிலேயே அன்றைய அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. அப்படியிருக்க, கலைஞர் அல்லது திமுக உண்மையில் ஏதேனும் தவறு செய்திருந்தால், அன்றைய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்குமா? இந்த வரலாற்றுப் பின்னணியை அறியாமலும் புரிந்துகொள்ளாமலும் விஜய் பேசியுள்ளார். இன்று காலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதற்கு முந்தைய நாளில் ஆளும் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த ஒருவர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய நிலையில், அவற்றிலிருந்து கவனத்தைத் திருப்பும் வகையில் விஜய் செயல்பட்டுள்ளார். இது ஒரு திட்டமிட்ட திசைதிருப்பல் முயற்சி. இதன் மூலம் மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சின் மீது செல்லும். இதனால் த.வெ.க. உறுப்பினர் கொலை மற்றும் அமைச்சரின் காரால் ஏற்பட்ட உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் குறித்த செய்திகள் பின்னுக்குத் தள்ளப்படும். 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் மற்றும் ஜெயலலிதா குறித்தும் விஜய் பேசியுள்ளார். அந்த விவகாரம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. அப்போது ஜெயலலிதாவுடன் இருந்த திருநாவுக்கரசு, சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்து பலமுறை பத்திரிகைகளிடம் விளக்கியுள்ளார். எனவே, விஜய் அரசியல் ரீதியாக மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆணித்தரமாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், சட்டப்பேரவையில் திசைதிருப்பும் வகையிலான பேச்சை முன்வைத்துவிட்டு விஜய் சென்றுள்ளார். தமிழகத்தின் அரசியல் வரலாற்றை முழுமையாக தெரிந்துகொண்டு முதல்-அமைச்சர் பேச வேண்டும். யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டும் படித்து பேசுவது சரியல்ல. இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறினார்.