நெல்லை அருகே சம்பளப் பணம் வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தியில், ஒப்பந்ததாரரின் காரைத் திருடிச் சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் மேற்கூரைத் தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை கேரள மாநிலம் பாலக்காடு கொடைக்காடு கண்ணாடி பகுதியைச் சேர்ந்த ராஜனின் மகன் நந்து ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்தார். அதே நிறுவனத்தில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பட்டுகாடு பகுதியைச் சேர்ந்த அய்யப்பனின் மகன் அனுப் (39) என்பவரும் பணியாற்றி வந்தார். அவருக்கு நந்து மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனுப் முறையாகப் பணியாற்றவில்லை எனக் கூறி, அவருக்கு வழங்க வேண்டிய ரூ.30 ஆயிரம் சம்பளப் பணம் நிலுவையில் வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அனுப், நந்துவுக்குச் சொந்தமான காரைத் திருடிச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து நந்து அளித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அனுப்பைத் தேடி வந்தனர். சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் அவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், திருடப்பட்ட காரைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.