அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை அரசு தாமதப்படுத்தியதாக அவர் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். தற்போது, தனது கல்வியே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கண்ணீர் மல்க அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது பதிவில், சமூகநீதி நாளில் மாணவர் பாரதிதாசனுக்கு ஏற்பட்டுள்ள நிலை சமூக அநீதியை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தவறை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி சுமத்தும் ஆட்சியாளர்கள், கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனக் கூறிய மாணவரை குறிவைத்து நெருக்கடி கொடுப்பதாகவும், அவரது கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு தள்ள முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர் பாரதிதாசனை பழிவாங்கும் நோக்கில் அவரது கல்வி பாதிக்கப்படும் வகையில் அரசு செயல்படுவதை ஏற்க முடியாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ரோஹித் வெமுலாவுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடுமையை அரசு தனக்கும் செய்கிறது என பாரதிதாசன் வேதனையுடன் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், மாணவரின் ஆராய்ச்சி படிப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். பாரதிதாசனுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்குவதுடன், அவரது ஆராய்ச்சி படிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கும் அரசு தேவையான ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.