குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகத்தின் 75-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கல்வியை தனிப்பட்ட மற்றும் குடும்ப நலனுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், சமூகத்துக்கும் நாட்டுக்கும் எவ்வாறு பயனளிக்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது: “மாணவர்கள் தங்களது பணியில் ஈடுபடும்போது, நாடு மற்றும் சமூகத்தின் நலனுக்கு முதன்மை அளிக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால், நாட்டின் வளர்ச்சியுடன் அவர்களும் முன்னேற முடியும். இதுபோன்ற முன்னேற்றம் மனநிறைவை அளிப்பதுடன், கல்வியின் உண்மையான நோக்கத்தையும் உணரச் செய்யும். பொறியாளர்களாக உருவாகும் மாணவர்கள், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். மருத்துவர்களாக வருபவர்கள், மருத்துவத்தை வெறும் தொழிலாக பார்க்காமல், சேவை மனப்பான்மையுடன் அணுக வேண்டும். மற்றவர்களுக்கு சேவை செய்வதில் மனிதாபிமானமும் அமைதியும் அடங்கியுள்ளன. அது மனநிறைவையும் வழங்குகிறது. வாழ்க்கைக்கு பொருளாதார வளங்கள் அவசியம் என்றாலும், பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்துமாக இருக்கக்கூடாது. பிறருக்கு உதவுவதிலேயே உண்மையான மனநிறைவு கிடைக்கிறது. அறிவியலாளர்கள் மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் செயல்பட வேண்டும். அதேபோல், கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்களது படைப்புகள் மூலம் சமூகத்தின் உணர்வுப்பூர்வமான தன்மையை மேலும் வளப்படுத்த வேண்டும்” என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.