விழுப்புரம் அருகே உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது, சமண சமயத்தைச் சேர்ந்த காவல் தெய்வமான தர்மதேவியின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை முதுகலை ஆய்வு மாணவர்கள் இணைந்து அப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் அரச மரத்தின் கீழ் பெண் தெய்வத்தின் சிற்பம் ஒன்று இருப்பதை கண்டறிந்தனர். ஆய்வாளர்களின் தகவலின்படி, இந்தச் சிற்பம் சமணர்களால் வழிபடப்படும் தர்மதேவியின் உருவமாகும். அம்பிகா, அம்பை, அம்பா, குஷ்மாந்தினி, அம்ர குஷ்மாந்தினி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் தர்மதேவி வழிபடப்படுகிறார். சுமார் 3 அடி உயரம் கொண்ட இந்தச் சிற்பத்தில், தர்மதேவி சுகாசன நிலையில் பீடத்தின் மீது அமர்ந்திருப்பது காணப்படுகிறது. அவரது தலையில் அலங்காரமான மகுடம் இடம்பெற்றுள்ளது. மகுடத்தின் முன்பகுதியில் அமர்ந்த நிலையில் நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தேவியின் இரு காதுகளிலும் காதணிகள், கழுத்தில் முத்துமாலை மற்றும் சரப்பளி ஆகிய அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன. இடுப்பில் மேகலையும், கால்களில் தண்டைகள் மற்றும் சிலம்புகளும் காணப்படுகின்றன. தர்மதேவியின் வலது காலுக்கு கீழ்பகுதியில் அவரது வாகனமாகக் கருதப்படும் சிங்கத்தின் உருவம் உள்ளது. மேலும், அவரது இரு குழந்தைகள் மற்றும் ஒரு பணிப்பெண்ணின் உருவங்களும் சிற்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி. 13 முதல் 14-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.