சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை இடைத்தரகர்கள் மூலம் மொத்தமாக முன்பதிவு செய்து, பின்னர் கூடுதல் விலைக்கு வழங்கியதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (சனிக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதையொட்டி சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கடந்த 7-ந் தேதி முதல் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டது. மொத்தம் 400 அறைகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 190 அறைகள் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள அறைகள் சன்னிதானத்தில் நேரடியாக பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. இந்த நேரடி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து 400 அறைகளும் முழுமையாக ஆன்லைன் முன்பதிவு முறைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே அனைத்து நாட்களுக்குமான பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாமி தரிசனத்திற்காக பதிவு செய்யப்பட்ட விர்ச்சுவல் கியூ பட்டியலில் உள்ள பெயர்களையும், அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களின் பெயர்களையும் அதிகாரிகள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அறைகளை முன்பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோரின் பெயர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது. மேலும், போலியான அடையாள ஆவணங்களை தவறாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பெரும்பாலான அறைகளை முன்கூட்டியே மொத்தமாக முன்பதிவு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த அறைகளை தேவைப்படும் பக்தர்களுக்கு கூடுதல் தொகைக்கு வழங்கி அதிக லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தேவஸ்தான தலைவர் கே. ஜெயக்குமார் கூறுகையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள விருந்தினர் இல்ல அறைகள் மிகக் குறுகிய காலத்தில் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு முழுமையாக தீர்ந்ததன் பின்னணியில் முறைகேடு ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து தேவஸ்தான குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆன்லைன் முன்பதிவு நடைமுறையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா அல்லது வெளிநபர்களின் தலையீடு இருந்ததா என்பதும் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த முறைகேட்டில் தேவஸ்தான ஊழியர்களுக்கும் வெளிநபர்களுக்கும் இடையே மறைமுக தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.