சபரிமலை கோவிலில் தமிழக பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மாயம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சபரிமலை கோவிலில் தமிழக பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மாயம்

சபரிமலை கோவிலில் தமிழக பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மாயம்

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு வழங்கப்பட்ட தங்கக் கிரீடம் மாயமாகியுள்ளது. சுமார் 55.72 சவரன் (445.76 கிராம்) எடை கொண்ட இந்த கிரீடத்துக்குப் பதிலாக அதே வடிவம் மற்றும் அளவில் போலி கிரீடம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்குவதும் வழக்கம். அந்த வகையில், தமிழக பக்தர்களால் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட தங்கக் கிரீடம், கோவிலின் நன்கொடை பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் திருவாபரணங்களின் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையிலான திருவாபரணங்களை சரிபார்க்கும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, அசல் தங்கக் கிரீடத்துக்குப் பதிலாக போலி கிரீடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வைரங்களைப் போன்ற வெள்ளை நிறக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தமிழக பக்தர்கள் வழங்கியபோது இருந்த கிரீடத்தின் எடையுடன் ஒப்பிடுகையில், தற்போது பாதுகாப்பு அறையில் காணப்படும் கிரீடத்தின் எடை குறைவாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என கூறப்படும் நிலையில், அசல் தங்கக் கிரீடம் எங்கு சென்றது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசல் கிரீடத்தை அகற்றிவிட்டு போலி கிரீடம் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனதிருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே துவார பாலகர் சிலைகளில் தங்கம் மாயமானதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 55.72 சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடம் மாயமான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.