சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (AAI) பதிலாக வேறு ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது, விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் தனியார் சொத்து அல்ல என்றும், நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்புகளில் ஒன்றாக இருப்பதுடன், தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கட்சி தெரிவித்துள்ளது. விமான நிலைய நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றும், பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல் மற்றும் சாலை இணைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தீர்வாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.6,522 கோடி நிகர லாபம் இந்திய விமான நிலைய ஆணையம் நாடு முழுவதும் விமான நிலையங்களை நிர்வகித்து குறிப்பிடத்தக்க வருவாய் மற்றும் லாபம் ஈட்டி வருவதாகவும், 2025-26 நிதியாண்டில் அதன் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாக நிதிநிலைத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25ஆம் ஆண்டில் இந்திய விமான நிலைய ஆணையம் நிர்வகிக்கும் விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டியவற்றில் சென்னை விமான நிலையம் இரண்டாவது இடத்தில் இருந்ததாகவும், அதன் லாபம் சுமார் ரூ.492.48 கோடி என தரவுகள் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. லாபகரமாக செயல்படும் பொதுத்துறை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது தேவையற்றது என்றும், பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பில் இருந்து கிடைக்கும் வருவாய் மற்றும் லாபம் அரசின் பொதுவளமாகவே தொடர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்திலும் முக்கிய பங்கு சென்னை விமான நிலையம் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகளில் முக்கியமான சரக்கு போக்குவரத்து மையமாக செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தகவல்படி, சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சரக்கு இடமாற்றப் பணிகள் நடைபெறுகின்றன. சரக்கு முனையத்தில் நெரிசலை குறைக்கும் வகையில் 19.06 ஏக்கர் நிலத்தை ரூ.278 கோடிக்கு பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு அனுப்பும் முகவர்கள் சந்திக்கும் தாமதங்களை குறைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 5.2 கிலோமீட்டர் சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலனையில் இருப்பதாகவும், பயணிகள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளும் சென்னை விமான சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5-வது முனையம் குறித்து வலியுறுத்தல் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி 5-வது முனையத்தை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 5.5 கோடி பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையத்தின் திறனை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், 5-வது முனையத் திட்டம் தற்போது ஆரம்பக்கட்ட கருத்தாக்க நிலையில் மட்டுமே இருப்பதாகவும், முழுமையான தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுத்துறை திட்டமிடல் மற்றும் முதலீட்டின் மூலம் உருவாக்கப்படும் உள்கட்டமைப்பின் பலன் தனியார் லாபமாக மாறக்கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பரந்தூர் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது என கூறியுள்ள கட்சி, விவசாய நிலங்களை பாதுகாப்பது மட்டுமின்றி பொதுச்சொத்துகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அரசின் வருவாய் ஆகியவற்றை பாதுகாப்பதும் பொதுநலனின் ஒரு பகுதியாகும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நவீன விமான நிலையம், பயணிகளுக்கு உலகத்தர வசதிகள், வேகமான சரக்கு போக்குவரத்து மற்றும் அதிகரிக்கப்பட்ட விமான நிலைய திறன் ஆகியவை தேவை என்றும், அதற்காக தனியார்மயமாக்கல் அவசியம் என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் கட்சி கூறியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்து, தேவையான அதிகாரம், முதலீடு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நிர்வாகத் திறனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் பொதுச்சொத்தை தனியார் லாபத்துக்காக ஒப்படைப்பது வளர்ச்சி அல்ல என்றும், பொதுத்துறை விமான நிலையத்தை வலுப்படுத்துவதே மாற்று வழி என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. எனவே, சென்னை விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொதுத்துறை நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் இடஒதுக்கீட்டுடன் கூடிய வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக நிதியை பாதுகாக்க முடியும் என்றும் ஒன்றிய, மாநில அரசுகளை கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.