சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், இரண்டு குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள் கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை இரவு முழுவதும் சூழ்ந்துகொண்ட சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கரும்புகளை ஏற்றிக்கொண்டு, சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு லாரி ஒன்று நேற்று திங்கள்கிழமை புறப்பட்டது. ஆசனூர் - திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்றபோது, நள்ளிரவில் லாரி திடீரென பழுதடைந்தது. இதையடுத்து, ஓட்டுநர் வாகனத்தைச் சாலையோரத்தில் நிறுத்தினார். அந்த நேரத்தில் வனப்பகுதியிலிருந்து இரண்டு குட்டிகளுடன் வெளியே வந்த காட்டு யானைகள், கரும்பு லாரியைச் சுற்றி வளைத்தன. லாரியில் இருந்த கரும்புகளைத் தும்பிக்கையால் எடுத்து, இரவு முழுவதும் யானைகள் உணவாக உட்கொண்டன. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த வனச்சாலை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், லாரியைச் சுற்றி யானைகள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்பு கருதி பலரும் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த வாகன ஓட்டிகளுடன் இணைந்து நீண்ட நேரம் ஹாரன் ஒலி எழுப்பினர். இதையடுத்து, கரும்புகளைச் சாப்பிட்டுக்கொண்டே யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகு, சாலையில் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியது. கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகளை யானைகள் பின்தொடர்வது வழக்கமாக இருப்பதால், இந்தப் பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். குட்டிகளுடன் யானைகள் கரும்பு லாரியைச் சுற்றி வளைத்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.