தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டுக்குள் புகுந்து பெண்ணை வெட்டிக் கொலை செய்த பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், காணாமல் போன 15 வயதுடைய இரண்டு சிறுமிகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். முதலூரில் வசித்து வந்த மேரி ரெஜிலாவின் வீட்டுக்குள் புகுந்த ஞானபிரகாஷ், அவரை அரிவாளால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மேரி ரெஜிலாவின் கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸெட் ராஜா ஆகியோரும் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வீட்டில் இருந்த மேரி ரெஜிலாவின் 15 வயதுடைய இரண்டு மகள்களையும் காணவில்லை. இதையடுத்து, சிறுமிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்ட இருண்ட அறையில் இருந்த சிறுமிகளை போலீசார் மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விஜேந்திர பிதரி செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலூரில் மேரி விஜிலாவைக் கொலை செய்த ஞானபிரகாஷ், அவரது இரண்டு மகள்களையும் அழைத்துச் சென்றதாகத் தெரிவித்திருந்தார். மேலும், ஞானபிரகாஷின் வீட்டில் இருந்து சிறுமிகள் மீட்கப்பட்டதாகவும், தலைமறைவான அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஞானபிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமியுடன் அவர் வைத்திருந்த பழக்கத்துக்கு மேரி ரெஜிலா எதிர்ப்பு தெரிவித்ததே கொலைக்குக் காரணம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவநாதன் தெரிவித்துள்ளார்.