சென்னை பெருங்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் சிவபாதம் (70), சொத்துகளை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிடுவதாக கூறியதால் அவரது மகன் கத்தியால் வெட்டிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி ரேணுகாவும் (50) கைது செய்யப்பட்டுள்ளார். சிவபாதத்துக்கு ரேணுகா என்ற மனைவியும், மதுசூதனன் (39) என்ற மகனும் உள்ளனர். என்ஜினீயரிங் பட்டதாரியான மதுசூதனன், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். சிவபாதம் குடும்பத்துக்கு பெருங்குடி பழைய மாமல்லபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளன. சுமார் 10 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்ட மதுசூதனன், பெருங்குடியில் உள்ள வீட்டுக்கு வந்து பெற்றோர், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். வீடுகளின் மூலம் கிடைத்த வாடகை வருவாயை வைத்து குடும்பச் செலவுகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவபாதத்துக்கு மருத்துவம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்தன. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, வாலாஜாபாத் அருகே மருதம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று அவர் தனியாக வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு மருதம் கிராமத்தில் உறவினர் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக ரேணுகாவும் மதுசூதனனும் அங்கு சென்றனர். அப்போது சிவபாதத்தை சென்னைக்கு வந்து தங்களுடன் வசிக்குமாறு அவர்கள் அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், சென்னை வீடுகளின் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தை தனது செலவுக்காக வழங்குமாறு கேட்டதாகவும், பணம் தராவிட்டால் தனது பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிடுவேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் சிவபாதம் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இறுதிச்சடங்குகள் முடிந்து அவரது உடலை எரியூட்டுவதற்காக எடுத்துச் சென்றபோது, சிவபாதத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில் சிவபாதத்தின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ரேணுகா மற்றும் மதுசூதனனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நேற்று முன்தினம் மதுசூதனன் தனது தந்தையின் கால் மற்றும் கழுத்துப் பகுதியில் கத்தியால் வெட்டியதாகவும், இதில் சிவபாதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கணவர் மற்றும் வீட்டில் படிந்திருந்த ரத்தக்கறைகளை ரேணுகா துடைத்து அகற்றியதுடன், சிவபாதம் மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் கூறி நம்ப வைத்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மதுசூதனன் மற்றும் ரேணுகா இருவரையும் கைது செய்தனர்.