தமிழ்நாடு சட்டசபையில் பாமக சார்பில் எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வரும் சவுமியா அன்புமணியின் செயல்பாடுகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.தமிழக சட்டசபைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாமகவின் மூத்த நிர்வாகியான சவுமியா அன்புமணி, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளார். பாமக சார்பில் 4 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகியுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சவுமியா அன்புமணி பங்கேற்று தனது கருத்துகளை முன்வைத்து வருகிறார். அவரது சட்டமன்ற செயல்பாடுகள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளன.இந்த நிலையில், சட்டசபையில் சவுமியா அன்புமணி உரையாற்றும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கமல்ஹாசன், அவரது செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார்.அவர் தனது பதிவில், சட்டமன்றத்தில் தனக்கு கிடைக்கும் நேரத்தை மிகவும் திறம்பட பயன்படுத்துவதுடன், துல்லியமான தகவல்களை முன்வைத்து மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் சவுமியா அன்புமணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.