சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்க உள்ளதால், இன்றைய கூட்டத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4, 5 மற்றும் 6-ந்தேதிகளில் 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் இடம்பெறாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும், அரசினர் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது. இதுவரை 18 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில், கடந்த 3-ந்தேதி நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் முக்கியத்துவம் பெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் அன்றைய கூட்டத்தில் கடும் விவாதம் ஏற்பட்டது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 116 நாட்களில் தமிழ்நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும், அந்த காலகட்டத்தில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அவற்றில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் மற்றும் 10 ஆணவக் கொலைகள் அடங்கும் என்றும் தெரிவித்தார். தாம் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோல், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் பேசியபோது குறுக்கிட்டுப் பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் இன்று சட்டசபையில் தெளிவான விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். தான் அவையில் இல்லாத நேரத்திலும் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் குறித்த தகவல்கள் தமக்கு வந்து சேரும் என்றும், அவற்றுக்கு உரிய பதில்களை வழங்குவேன் என்றும் அவர் கூறினார். மேலும், தி.மு.க. உறுப்பினர்கள் தாம் அளிக்கும் பதிலின்போது அவையில் இருந்து வெளியேறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இந்த சூழலில், 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று நடைபெறும் கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்குகிறார். குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த துறைகளுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதிலுரையின்போது புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதற்கான பதில் இன்று காலை சட்டசபையில் தெரியவரும். முதல்-அமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து வனத்துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும். அவற்றின் மீதான விவாதங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் பதிலுரை வழங்க உள்ளனர்.