செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: மர்ம நபர்கள் நடமாட்டம்..? - சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: மர்ம நபர்கள் நடமாட்டம்..? - சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: மர்ம நபர்கள் நடமாட்டம்..? - சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், அவர் காணாமல் போன அதே நள்ளிரவில் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மர்ம நபர்கள் நடமாடியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்குப் புதிய தகவல் கிடைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. கடந்த 11-ம் தேதி மாலை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, பின்னர் பெற்றோருடன் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் அதிகாலையில் பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. சிறுமியைத் தேடிக் கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. துணைக் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் 6 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 7-வது நாளான நேற்று இரண்டாம் கட்ட விசாரணையை போலீசார் தொடங்கினர். தற்போது 4 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே அறையில் தூங்கிய சிறுமி மாயமானது எப்படி? சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 11-ம் தேதி இரவு சிறுமி தனி அறையில் உறங்கவில்லை. தனது பெற்றோர் வடிவேலு, பவானி மற்றும் பாட்டியுடன் ஒரே அறையில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்படியிருக்கையில், நள்ளிரவில் சிறுமி மட்டும் எப்படி வெளியே சென்றார்? அவர் எழுந்து சென்றது யாருக்கும் தெரியவில்லையா? அல்லது யாரேனும் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை அழைத்துச் சென்றார்களா? எனப் பல்வேறு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டிய மர்ம நபர்கள் சிறுமி மாயமாகி 18 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறுமி காணாமல் போன அதே நள்ளிரவில், அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வசிக்கும் மணிமேகலை என்ற மூதாட்டியின் வீட்டுக் கதவை மர்ம நபர்கள் தட்டியதாகத் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி, அச்சம் காரணமாகக் கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவலைத் தொடர்ந்து மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், கதவு தட்டப்பட்ட நேரம் மற்றும் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாடியது தொடர்பாக அவரிடம் விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியைக் கடத்த வந்தவர்கள் வழிமாறி மூதாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டினார்களா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அன்றைய இரவில் கிராமத்தில் சுற்றித் திரிந்த மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறியவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மூதாட்டியின் வீட்டைச் சுற்றியுள்ள பாதைகள் மற்றும் முட்புதர்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூதாட்டி அளித்துள்ள வாக்குமூலம், சிறுமி மாயமான வழக்கில் முக்கியத் தடயமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.