செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி: தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி: தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை?

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி:  தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியை கண்டுபிடிக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைக்குன்றுகள், குகைகள், கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சிறுமியின் தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமாவதி (7). கடந்த 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்த பெற்றோர், சிறுமியைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சிறுமியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதுடன், பல பகுதிகளிலும் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.ஆறாவது நாளாக நீடிக்கும் தேடுதல் பணி சிறுமி மாயமாகி ஐந்து நாட்கள் கடந்தும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், ஆறாவது நாளாகவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் போலீசார், வீடுகளின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் சிறுமியின் வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 50 டிரோன்கள் மூலம் கண்காணிப்பு சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாயக் கிணறுகள் ஆகிய இடங்களில் தேடுதல் நடைபெறுகிறது. மேலும், மலைக்குன்றுகளில் உள்ள குகைகள் மற்றும் பாறை இடுக்குகளிலும் சிறுமி இருக்கிறாரா என 50 டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புத் துறையினரும் ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கித் தேடி வருகின்றனர். இதனிடையே, மரக்காணத்தில் இருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகள் கொண்டுவரப்பட்டு, ஆழமான பெரிய கிணறுகளிலும் வலைவீசித் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாயிடம் நீண்ட நேரம் விசாரணை இதற்கிடையில், சிறுமியின் தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் ஜோதிடம் பார்க்கும் சாமியார் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் தாயிடம் நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான சிறுமியை மீட்க போலீசார் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.