விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமாவதி காணாமல் போன வழக்கில், சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோர், உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்துவதுடன், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் கோபுரத் தரவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு மாயமான சிறுமி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசிக்கும் வடிவேலு - பவானி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமாவதி (7). கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்த பெற்றோர், சிறுமியைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அவரைக் கண்டுபிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணையும் தேடுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், 10 நாட்களாகத் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட வழக்கு தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் கீதா ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்து, உள்ளூர் போலீசார் இதுவரை நடத்திய விசாரணை மற்றும் சேகரித்த தகவல்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பெற்றோரிடம் பல்வேறு கேள்விகள் பின்னர் ஜவகர், கீதா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் ஆலம்பூண்டியில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு சிறுமியின் தாயார் பவானியிடம் சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரித்தனர். பிறந்தநாள் விழா எப்போது தொடங்கி முடிந்தது, சிறுமியை வாழ்த்த யார் யார் வந்தனர், உறவினர்கள் எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஹேமாவதி எத்தனை மணிக்குத் தூங்கினார், அவருக்கு அருகில் யார் படுத்திருந்தனர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டறிந்தனர். மேலும், சிறுமி காணாமல் போனதை முதலில் யாரிடம் தெரிவித்தனர், சத்தியமங்கலம் போலீசில் எப்போது புகார் அளித்தனர் என்பன போன்ற கேள்விகளையும் எழுப்பினர். பவானி அளித்த பதில்கள் விசாரணையில் பதிவு செய்யப்பட்டன. சம்பவ இடத்தில் ஆய்வு சம்பவத்தன்று மோப்ப நாய் ஏஸ் சென்ற பாதையையும் போலீசார் ஆய்வு செய்தனர். சிறுமியின் வீட்டின் மாடிக்குச் சென்று, அங்கிருந்து சுற்றுப்புறப் பகுதிகளையும் பார்வையிட்டனர். அதிகாலை 3 மணியளவில் சிறுமி அழும் சத்தம் கேட்டதாக ஏற்கெனவே போலீசாரிடம் தெரிவித்திருந்த எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு சிபிசிஐடி அதிகாரிகள் விழுப்புரம் திரும்பினர். வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு சிறுமி காணாமல் போனது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களை உள்ளூர் போலீசார் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். இரண்டாவது நாளாகத் தொடரும் விசாரணை தற்போது சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியை வரைபடமாகத் தயாரித்து, சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாகக் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் கோபுரத் தரவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமி காணாமல் போனதற்கான காரணம் மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.