கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி, கோவை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடத்தி பொதுமக்களைச் சந்திக்கிறார். கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ஏழு தளங்களுடன் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து இன்று வருகை பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 11 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் வரவேற்பு அளிக்கின்றனர். இதைத்தொடர்ந்து, அவினாசி சாலை வழியாக காந்திபுரம் நோக்கி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ செல்கிறார். வழிநெடுகிலும் பொதுமக்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. காலை 11.45 மணிக்கு நூலகத்தின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகத்தைக் குறிக்கும் கல்வெட்டை அவர் திறந்து வைக்கிறார். நூலகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிடுகிறார் திறப்பு விழாவுக்குப் பிறகு, நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், வாசிப்புப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளை முதல்வர் பார்வையிடுகிறார். பின்னர் நூலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்லும் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளித்து நினைவுப் பரிசுகளை வழங்குகின்றனர். தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் நிறைவடைந்துள்ள பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, கோவையில் நடைபெறும் அரசு விழாவில் விஜய் முதன்முறையாகப் பங்கேற்கிறார். இதனால் அவரைக் காணவும் வரவேற்கவும் தொண்டர்களும் பொதுமக்களும் அதிக அளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அவினாசி சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினரும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். நூலக வளாகத்தில் பசுமையான புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. முதல்வரின் வருகையை முன்னிட்டு கோவையில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரையிலான பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சூரில் நவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்பு கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மதியம் 2 மணியளவில் முதல்வர் விஜய் கோவை விமான நிலையத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குப் புறப்பட்டுச் சென்று, தனது நண்பரின் வீட்டில் நடைபெறும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். திருச்சூர் செல்லும் விஜய், குருவாயூர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்யக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் மீண்டும் கோவை விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார்.