கோவையில் பெரியார் அறிவுலக மையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவையில் பெரியார் அறிவுலக மையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

கோவையில் பெரியார் அறிவுலக மையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்தைத் தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ஏழு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வழியாக காந்திபுரத்தில் உள்ள விழா நடைபெறும் இடத்துக்கு அவர் சாலை வலம் மேற்கொண்டார். சுமார் 11.4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் பயணத்தின்போது, சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், முதல்-அமைச்சரைக் காண்பதற்காகப் பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். காலையிலேயே சாலையோரங்களில் காத்திருந்த மக்கள், விஜய்யின் கார் வந்தபோது மேளதாளங்கள் முழங்கவும், மலர்களைத் தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் வரவேற்றனர். அவர்களை நோக்கிக் கையசைத்தபடி முதல்-அமைச்சர் விஜய் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் பெரியார் அறிவுலகத்துக்கு வந்த அவருக்குக் கோவை மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட விஜய், நூலக நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையையும், பெரியார் அறிவுலகம் தொடர்பான கல்வெட்டையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, ரிப்பன் வெட்டி பெரியார் அறிவுலக நூலகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள வரவேற்புப் பகுதி, குழந்தைகள் நூலகம், புத்தக வாசிப்புப் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் நிறைவடைந்துள்ள பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.