கோவையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை; மக்கள் கடும் அவதி!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
25 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை; மக்கள் கடும் அவதி!

கோவையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை; மக்கள் கடும் அவதி!

கோவை மாநகரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எனப் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகளும் அவர்களுடன் வந்தவர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும், மாநகரின் சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்தைச் சந்தித்தனர். ஏற்கெனவே பல சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலையும் ஏற்பட்டது. ஒருபுறம் கனமழையால் நகரின் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும், மழையின் காரணமாக மாநகரில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கோவையில் அதிகபட்ச மழைப்பதிவு தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேளாண் ஆராய்ச்சி மையப் பகுதியில் 7.15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, குன்னூர் மற்றும் புதுச்சேரியில் தலா 4.7 சென்டிமீட்டர் மழையும், கொடைக்கானலில் 4.24 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையின் எண்ணூர் துறைமுகப் பகுதியில் 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.