கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை இன்று நிறைவடைந்தது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில், நூல் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகம் அண்மையில் திறக்கப்பட்டது. இந்நிலையில், நூலகத்தின் தமிழ் பிரிவில் போலியான ஆசிரியர் பெயர்களைப் பயன்படுத்தியும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் புகார் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பதிப்பகங்களின் 1,800-க்கும் அதிகமான புத்தகங்கள் நூலக அலமாரிகளில் இருந்து அகற்றப்பட்டன. இதற்கிடையே, நூல் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் திமுக சட்டத்துறை ஆகியவை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தனித்தனியாக புகார் அளித்தன. இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடங்கியது. ஏடிஎஸ்பி இமானுவேல் சேகரன் தலைமையில் 6 அதிகாரிகள் கொண்ட குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. நூலகத்தின் 3-வது தளத்தில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில், சர்ச்சைக்குள்ளான அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் உத்தரவுகள், பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், பில்கள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய சோதனை, பிற்பகல் 2.30 மணியளவில் முடிவடைந்தது. இந்த ஆய்வின்போது வாசகர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நூலகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டது.