கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் மீண்டும் பேட்டரி கார் சேவை: பயணிகள் மகிழ்ச்சி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் மீண்டும் பேட்டரி கார் சேவை: பயணிகள் மகிழ்ச்சி

கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் மீண்டும் பேட்டரி கார் சேவை: பயணிகள் மகிழ்ச்சி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி கார் சேவை, 'தினத்தந்தி' செய்தியின் எதிரொலியாக நேற்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவில்பட்டி ரெயில் நிலையம் வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். கோவில்பட்டி மட்டுமின்றி கழுகுமலை, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களும் வெளியூர் பயணங்களுக்காக இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். முதியவர்கள், பெண்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களும் அதிகளவில் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தூத்துக்குடி-மைசூரு ரெயிலில் பயணிக்கும் நெல்லை பகுதி மக்களும், நாகர்கோவில், நெல்லை வந்தே பாரத் உள்ளிட்ட தென்பகுதி ரெயில்களில் பயணம் செய்யும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர்களும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவை செயல்பட்டு வந்தது. பயணிகளின் உடைமைகளை எடுத்துச் செல்லவும், ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு பயணிகளை அழைத்துச் செல்லவும் இந்த சேவை உதவியாக இருந்தது. இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேட்டரி கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிக அளவிலான உடைமைகளுடன் வந்த பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்லவும், தங்களது உடைமைகளை எடுத்துச் செல்லவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் சேவையை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என கடந்த 14-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக, கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நேற்று முதல் பேட்டரி கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சேவை மீண்டும் கிடைக்கத் தொடங்கியதால் குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பேட்டரி கார் சேவையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கும், இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பயணிகள் நன்றி தெரிவித்ததுடன் பாராட்டும் தெரிவித்தனர்.