தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், கோவில் பூசாரியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (67). இவர், எட்டயபுரம் அருகே உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். மற்றொரு மகன் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சம்பவத்தன்று காலை 7 மணியளவில் கருப்பசாமி தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர், அவரது மகன்களும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குப் புறப்பட்டனர். இதனால் வீடு ஆள் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், மாலை 3 மணியளவில் கூரியர் ஊழியர் ஒருவர் கருப்பசாமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுத் திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக செல்போன் மூலம் கருப்பசாமிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து மனைவியுடன் வீட்டிற்கு விரைந்து வந்த கருப்பசாமி, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்ததுடன், அறை முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 2 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கருப்பசாமி அளித்த புகாரின் அடிப்படையில் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் காரில் அங்கு வந்ததாகத் தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் வீட்டின் முன்பு கார் நின்றிருந்த நிலையில், அதில் வந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து, கொள்ளையில் தொடர்புடைய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.