சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள், மலர்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கரும்புக்கும் முக்கியத்துவம் இருப்பதால், கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து டன் கணக்கில் கரும்புகள் லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கரும்புகளை வாங்க பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் முன்வரவில்லை. இதனால் கரும்பு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 30 லாரிகளில் கொண்டு வரப்பட்ட கரும்பு கட்டுகளில் பெரும்பாலானவை விற்பனையாகாமல் தேங்கின. கரும்பு வெட்டும் கூலி மற்றும் லாரி வாடகை உள்ளிட்ட செலவுகளைச் செய்து கொண்டு வரப்பட்ட நிலையில், விற்பனை இல்லாததால் முதலீட்டை கூட திரும்பப் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்தனர். மீதமுள்ள கரும்புகளை மீண்டும் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து செலவு மேலும் அதிகரிக்கும் என்பதால், வேறு வழியின்றி வியாபாரிகள் கோயம்பேடு பகுதிகளில் சாலையோரங்களில் கரும்பு கட்டுகளை விட்டுச் சென்றனர். அவற்றை அப்பகுதி மக்கள் கட்டுக்கட்டாக எடுத்துச் சென்றனர். சில கரும்புகள் மாடுகளுக்கும் உணவாகின. புதிய விற்பனை இடத்தில் போதிய வசதி இல்லை இதுகுறித்து கரும்பு வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட புதிய இடத்தில் உள்ளே வருவதற்கு மட்டும் வழி உள்ளது என்றும், வெளியே செல்லுவதற்கு முறையான பாதை இல்லை என்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் அந்த பகுதிக்குள் அதிக அளவில் வந்து கரும்புகளை வாங்கவில்லை என அவர்கள் கூறினர். இதனால் முதலீடு செய்த தொகையை கூட எடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், லாரி வாடகைக்கான செலவைக் கூட ஈட்டும் அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களில் பலர் சொந்த ஊர்களுக்குச் சென்றதும் கரும்பு விற்பனை குறைந்ததற்கு மற்றொரு காரணமாக அமைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே, கரும்பு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு விற்பனைக்கு தனி மார்க்கெட் அல்லது முறையான இடத்தை ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.